அசாதுதீன் ஓவைசி - திருமுருகன் காந்தி: கோப்புப்படம் 
தமிழகம்

சிஏஏ எதிர்ப்புப் பொதுக்கூட்டம்: அசாதுதீன் ஒவைசி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

வ.செந்தில்குமார்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசியத் தலைவர் அசாதுதீன் ஒவைசி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈத்கா மைதானம் அருகில் கடந்த 19-ம் தேதி இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றுப் பேசினர்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், பொதுக்கூட்டம் நடைபெற்றபோது பாதுகாப்பு அளித்தனர்.

இதற்கிடையில், ஆம்பூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சர்குணகுமார் (45) என்பவர், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அசாதுதீன் ஒவைசி, திருமுருகன் காந்தி, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா, ஏஐஎம்ஐஎம் மாநில தலைவர் வகீல் அஹ்மத், மகாராஷ்டிர மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் சாகிப், டெல்லி பல்கலைக்கழக மாணவி நீதா பர்வீன், சட்டக் கல்லூரி மாணவர் வலி ரஹ்மானி, ஏஐஎம்ஐஎம் மாவட்ட தலைவர் இம்தியாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித், மதிமுக வாணியம்பாடி நகர செயலாளர் நாசீர்கான் உள்ளிட்ட 17 பேர் மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் நேற்று (பிப்.20) வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT