மதுரை மாநகர் காவல் ஆணையரான டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 2018 ஜூன் 13-ல் மதுரை மாநகர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ஆணையராகப் பொறுப்பேற்ற பின்னர் நகரில் கஞ்சா ஒழிப்பு, விபத்துக்களைக் குறைப்பது, சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, நகரிலுள்ள 100 வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். இதுவரை நகரில் பல்வேறு வார்டுகளில் 18,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், வார்டுக்கு ஒரு எஸ்.ஐ என்ற முறையில் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பது போன்ற செயல்களிலும் ஆர்வம் காட்டினார். காவல் நிலையங்களில் பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தார்.
குறிப்பாக குற்றப்பிரிவு தொடர்பான நிலுவை புகார்களுக்கு எப்ஐஆர் பதிவு செய்து, களவு போன நகை உள்ளிட்ட பொருட்களை மீட்க போலீஸார் அறிவுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 1995-ல் ஐபிஎஸ் அதிகாரிகளாகத் தேர்வாகி பணியில் சேர்ந்தவர்களுக்கான கூடுதல் டிஜிபி பதவி உயர்வுப் பட்டியல் வெளியாகிவுள்ளது.
4 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் மதுரை காவல் ஆணையரின் பெயர் முதலில் உள்ளது. விரைவில் அவருக்கான பதவி உயர்வு மற்றும் பணி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பட்டியலில் சந்தீப் மிட்டல், பால நாகதேவி, சேஷாய் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாததின் பதவி உயர்வை மதுரை மக்களும், மாநகர போலீஸாரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.