கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா மற்றும் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று கோவை வருகிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில்,மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இசை நிகழ்ச்சியுடன் இடைவிடாத கொண்டாட்டம் சத்குரு தலைமையில் நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம்புறப்படும் அவர், காலை 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார்.
பின்னர், பீளமேட்டில் தனியார்கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெங்கய்ய நாயுடு, கார்மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார். இரவு ஈஷா யோகா மையத்தில் தங்கும் அவர் மறுநாள் (22-ம் தேதி) காலை கார் மூலம் விமான நிலையத்துக்கு வந்து, 8.30 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இதையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக காவல்துறைஅதிகாரிகள் கூறும்போது, ‘‘குடியரசுதுணைத் தலைவர் வருகையை யொட்டி, கோவை மாநகர காவல்துறையினர், மாவட்ட காவல்துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், அதி விரைவுப்படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் வழியில் காவல் துறையினர் நிறுத்தப்பட உள்ளனர். சோதனைக்கு பிறகே, விழா நடைபெறும் இடத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்’’ என்றனர்.