தமிழகம்

வரி வருவாயை அதிகரிக்க நிபுணர் குழு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் வரிவருவாயை அதிகரிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

ஒவ்வொரு துறைக்கும் பார்த்துப் பார்த்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான திருத்திய மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.25 ஆயிரத்து 71 கோடியாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 2 துணை மதிப்பீடுகள் மூலம் ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.6,234 கோடியே 91 லட்சம், மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய வரிப்பங்கில் குறைவு ஏற்பட்டதால் இழப்பு ரூ.7,586 கோடியே 7 லட்சம் ஆகும். ஆனால், செலவினங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியதன் காரணமாகவும், மத்திய அரசிடம் இருந்து மானியங்கள் கூடுதலாக வந்ததாலும் வருவாய் பற்றாக்குறையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்தது.

ஜிஎஸ்டியால் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, மத்திய விற்பனை வரி இழப்பை மத்திய அரசு சரிகட்டாதது ஆகியவற்றால் மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டு கடன் அளவு பெருகியுள்ளது. இருப்பினும் நிதிப் பற்றாக்குறை வரம்பு மீறாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஓரளவுக்கு தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளன. செலவுகளை கட்டுப்படுத்தவும், வரவை பெருக்கவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் அடிப்படையில், நிச்சயமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதிநிலைமை முன்னேற்றத்தை காணும். கடனை பெற்று மூலதன செலவுகள் மட்டும் செய்யாமல், வருவாய்க் கணக்கில் செலவழிக்கிறோம் என்ற குற்றச்சாட்டு தவறானதாகும். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதால், பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்தும் திறனுள்ள மாநிலமாக இருப்பதால் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கடனளிக்க முன்வருகின்றன.

கவர்ச்சிகரமான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று குறையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசின் உண்மையான நிதிநிலையை வெளிப்படையாக தெரிவித்து, எந்த அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. அதை எவ்வாறு அரசு சமாளிக்கிறது என்ற தெளிவான சிந்தனையுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமென்றே மக்கள் மனதை தவறான வழியில் கவர்வதற்காக தேவையற்ற கவர்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசு அல்ல இது. அதேநேரத்தில் மக்களின் உண்மைத் தேவையை அறிந்து அதை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

மாநிலத்தின் சொந்த வரிவருவாய் குறைவதை மாற்றியமைக்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். அவரது கருத்துகளை ஏற்று வரி வருவாயை அதிகரிக்க நிபுணர் குழுவை அரசு அமைக்கும். இக்குழு குறுகிய காலத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகள் மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைகளை பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய், நிதி பற்றாக்குறை இருந்தாலும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முக்கியமான திட்டங்கள், துறைகளுக்கு 2019-20-ம் ஆண்டை விட 2020-21-ம் நிதியாண்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போதும் எந்த சூழலிலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதகமாக எதுவும் நடக்காது. மக்களை பிளவுபடுத்தி லாபம் பெற யார் நினைத்தாலும் அனுமதிக்கவும் மாட்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT