தமிழகம்

புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச குறும்படத் திருவிழா நாளை தொடக்கம்: ஆஸ்கர் விருது வென்ற 'அமெரிக்கன் ஃபேக்டரி' திரையிடல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச ஆவண, குறும்படத் திருவிழா மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற 'அமெரிக்கன் ஃபேக்டரி' ஆவணப் படம் தொடக்க நாளில் திரையிடப்படுகிறது.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், சர்வதேச ஆவணப்பட, குறும்பட விழாக்குழு தலைவருமான லட்சுமி நாராயணன் எம்எல்ஏ கூறியதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடக வெகுஜன தொடர்பியல் துறை, மும்பை மத்திய அரசின் திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி திரை இயக்கம் ஆகியவை இணைந்து 9-வது சர்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழாவை பிப்ரவரி 21, 22, 23 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு அரங்கில் நடத்துகிறோம்.

தொடக்க விழாவில் எடிட்டர் லெனின், மத்திய அரசின் திரைப்பட பிரிவு அனில்குமார், இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இவ்விழாவில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சிரியா, சீனா, இலங்கை, பிரேசில் ஆகிய நாடுகளின் படங்களும், மும்பை திரைப்பட விழாவில் விருது பெற்ற படங்களும், பல்கலைக்கழக மாணவர்களின் படங்களும் திரையிடப்படுகின்றன.

தமிழகம், புதுவையைச் சேர்ந்த இளம் இயக்குநர்களின் ஆவண, குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. இவை சமூகம் சார்ந்த பிரச்சினைகளும், சுற்றுச்சூழல், சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் தற்போதைய மன அழுத்தங்கள் குறித்தும் பேசுகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு மொழிகள் பேசும் 41 படங்கள் திரையிடப்படுகின்றன.

தொடக்க விழாவில் 'காட்ஃபாதர்', 'தித்திப்பு', 'மிக்ஸி', 'நோ மீன்ஸ் நோ' ஆகிய படங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், முதல் நாள் விழாவில் ஆவணப்படப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற 'அமெரிக்கன் ஃபேக்டரி', 'சதிராட்ட முத்து கண்ணம்மா வாழ்வும் கலையும்', 'தேவரடியார் சதிர்', 'ஆன் ஈஸி ரைன்', 'உருமி' உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன’’.

இவ்வாறு லட்சுமி நாராயணன் எம்எல்ஏ கூறினார்.

பேட்டியின்போது விழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கூறுகையில், "இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் வண்ணநிலவன், பிரபஞ்சன் ஆகியோரின் கதைகளைக் குறும்படங்களாகப் பார்க்கலாம். முக்கியமாக எழுத்தாளர்கள் பா. ஜெயபிரகாசம், தமிழ்ச்செல்வன், ஆதவண் தீட்சண்யா, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் கூறுகையில், "இந்நிகழ்வில் ஆவணப்படங்களும் திரைமொழியும் என்ற வகுப்பை மாணவர்களுக்கு இவ்விழாவில் சிவக்குமார் எடுக்க உள்ளார். தனியாக திரைப்படங்களைப் பார்ப்பதை விட அரங்கில் பார்ப்பது சிறந்தது. அத்துடன் படத்திலுள்ள விஷயங்கள் விவாதத்தின் மூலம் கற்கலாம். இங்கு திரையிடப்படும் முக்கியப் படங்களை இணையத்தில் காண இயலாது. இங்கு மட்டுமே பார்க்க முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT