தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் நிலைகளைப் பாதுகாக்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர் நிலைகளில் கட்டப்படும் கட்டிடங்களைப் பதிவு செய்யக்கூடாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்தவிதமான கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது. சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக்கூடாது.
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என 28.1.2019-ல் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக தலைமை செயலர் கே.சண்முகம், மாநில வருவாய்த்துறை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா, ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஆற்றல் துறை செயலர் நிசாமுதீன், பதிவுத்துறை செயலர் பாலசந்திரன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டி.துரைசாமி, டி.ரவீந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள்/ மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தவறும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு பெறவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்த சுற்றறிக்கை அடிப்படையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தலைமை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.