காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்றினாலும் மத்திய அரசு அதை முறியடிக்கும். எனவே, மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராடினால் மட்டுமே அப்பகுதியை உண்மையில் பாதுகாக்க முடியும்" என மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
மதுரையில் மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும், அதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், அதை செயல்படுத்துவதில் மத்திய அரசு ஒரு முடிவோடு இருக்கிறது.
தமிழக அரசு டெல்டாவுக்காக சட்டம் போடுவது குப்பை தொட்டிக்குத்தான் போகும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை தரணி பாலைவனம் ஆகும்" என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "நாடு முழுதும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்ப்புகள் உருவாகி உள்ளது. பாஜக நினைப்பது போல இந்தியாவை பாஜக ஆக்கிரமிப்பு செய்து விட முடியாது. ஏழு தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் செய்வது தவறு, தமிழக அரசு செய்வது ஏமாற்று வேலை" எனத் தெரிவித்தார்.
மசோதா நிறைவேற்றம்...
காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.