தமிழகம்

ஐஐடி பெண்கள் கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் படம்: உதவிப் பேராசிரியர் கைது

செய்திப்பிரிவு

ஐஐடியில் பெண்கள் கழிப்பறையில் செல்போன் கேமராவை மறைத்து வைத்துப் படம் பிடித்த உதவிப் பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ்துறைக்குச் சொந்தமான ஆய்வுகூடம் உள்ளது. இங்கு மாணவ, மாணவியர் ஆய்வுக்காக வருவது வழக்கம். கடந்த திங்கள்கிழமை ஏரோஸ்பேஸ் பிஎச்டி மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் கழிப்பறையயைப் பயன்படுத்தச் சென்றார். அப்போது அங்கு தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே வட்ட வடிவில் துளையும், அதில் கரும்புள்ளி ஒன்று தெரிவதையும் பார்த்துள்ளார்.

அருகில் சென்று பார்த்தபோது துளைக்குள் செல்போன் ஒன்றும் அதன் கேமரா கண்கள் கழிவறையைப் பார்ப்பதுபோல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கழிவறைக்குப் பக்கத்தில் ஆண்கள் கழிப்பறை இருப்பதால் அந்தப் பக்கமிருந்து படம் எடுப்பது தெரிந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து விசாரித்தபோது மாணவி விவரத்தைக் கூறியுள்ளார். உடனடியாக ஆண்கள் கழிப்பறைக்குச் சென்ற சிலர் அங்கு மறைந்திருந்த நபரைப் பிடித்து வந்தனர். அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே துறையைச் சேர்ந்த ப்ராஜக்ட் அலுவலர் மற்றும் உதவிப் பேராசிரியர் சுபம் பானர்ஜி (30) எனத் தெரியவந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர் ஐஐடி ஏரோஸ்பேஸ் பிரிவில் பணியாற்றுகிறார்.

ஐஐடி நிர்வாகத்தினர் சுபம் பானர்ஜியிடம் விசாரணை நடத்தினர். அவரது செல்போன் சோதிக்கப்பட்டது. ஆனால் அவர் அதற்குள் அனைத்தையும் அழித்துவிட்டார். அவர் இதேபோன்று ஏராளமான பெண்களை எடுத்திருக்கலாம் என சந்தேகப்பட்ட ஐஐடி நிர்வாகத்தினர் அவரை கோட்டூர்புரம் போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸார் விசாரணையில் பல பெண்களை வீடியோ எடுத்ததை சுபம் பானர்ஜி ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 354 C , (4 H women harrassement act )பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுபம் பானர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

குற்றச்சாட்டை நிரூபிக்க செல்போன் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்பதால் அந்த செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களை எடுக்க, தடயவியல் துறை ஆய்வுக்கு செல்போன் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காவல் அதிகாரி ஒருவர், ''பெண்கள் பொதுக் கழிப்பறை, பொது இடங்களில் உள்ள உடை மாற்றும் இடங்கள், ஹோட்டல்கள், மால்கள், தியேட்டர்களில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது சரியாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்படும் கேமராக்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.

சமீபத்தில் கோவையில் பெட்ரோல் பங்க்கில் கழிப்பறையில் செல்போனை வைத்துப் படமெடுத்த 3 பேர் சிக்கி கம்பி எண்ணுகின்றனர். சட்டம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் திருந்துவதில்லை.

SCROLL FOR NEXT