சேலம் மாவட்டம் ஓமலூரில் சுற்றுலாப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில், நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாள நாட்டைச் சேர்ந்த 34 பேர் சுற்றுலாப் பேருந்தில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் வட மாநிலங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசித்துவிட்டு தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று (பிப்.19) இரவு சேலம் வழியாக பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். வழியில் சேலத்தை அடுத்த ஓமலூரில் சாலையோரத்தில் இருந்த கோயில் மண்டபத்தில் இரவு தங்குவதற்காகத் திட்டமிட்டனர்.
பேருந்தை ஓட்டுநர் 'யூ டர்ன்' எடுத்துத் திருப்பும்போது பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, நேபாள நாட்டு சுற்றுலாப் பேருந்து மீது மோதியது. இதில், சுற்றுலாப் பேருந்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தில் 18 பேர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட மூவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களும், உயிரிழந்த 6 பேரும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தவறவிடாதீர்!