காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை ஏற்றுள்ள தனியார் நிறுவனம், கழிவு நீரை மஞ்சள்நீர் கால்வாயில் வெளியேற்றி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித் துள்ளனர். அதேநேரம் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.10 கோடி தனியார் நிறுவனத்துக்காக செல விடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள பாதாள சாக்கடையின் பராமரிப்புப் பணிகள், 2012-ம் ஆண்டு முதல் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பணிகளை முறையாக மேற்கொள்ளாமல், கழிவுநீரை மஞ்சள்நீர் கால்வாயில் வெளியேற்றுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதாளசாக்கடை பராமரிப்புப் பணிக்காக மட்டும் 2014-15ம் ஆண்டில் ரூ.1.10 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூடுதல் செலவினங்களை தவிர்க்கவே பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மஞ்சள்நீர் கால் வாய் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது: பாதாள சாக்கடை கழிவுநீர், மஞ்சள் நீர் கால்வாயில் விடப்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள வீடுகளில் நிம்மதியாக சாப்பிடக்கூட முடிவதில்லை. கடந்த 2005-ம் ஆண்டு ஜவுளித்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.65 கோடியில், மஞ்சள் நீர் கால்வாயின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன.
இதையும், நகராட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளுக்காக ஆங் காங்கே இடித்துள்ளது. இடிக் கப்பட்ட பகுதிகளை சீரமைக்காத தால், அதிலிருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. எனவே, மஞ்சள் நீர் கால்வாயில் பாதாள சாக்கடை கழிவுநீரை வெளியேற்றி வரும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண் டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நகராட்சி பொறியாளர் சுப்புராஜ் கூறிய தாவது: காஞ்சிபுரம் நகராட்சியில் 1980-ம் ஆண்டு மக்கள் தொகை 70 ஆயிரம். தற்போது, 1.35 லட்சம் பேர் வசிக்கின்றனர். அப்போது, பாதாள சாக்கடையின் நீளம் 70 கி.மீ. மட்டுமே. மனித சக்தியினால் மட்டுமே அடைப்பு, உடைப்புகள் சீரமைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 90 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளி யேற்றப்பட்டது. அதனால், பரா மரிப்புப் பணிகளுக்கான செலவும் குறைவாக இருந்தது. இந்த தொகையே 18 ஆண்டுகள் வரை செலவிடப்பட்டு வந்தது.
ஆனால், 2009-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடையின் நீளம் 111 கி.மீ. ஆனது. நாள் ஒன்றுக்கு 197.14 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மனித உயிரிழப்புகள் ஏற்படுவதால், பாதாள சாக்கடை பணியில் மனிதர் களை ஈடுபடுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், இயந்திரங்கள் மூலம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நகராட்சியின் செலவு கூடியுள்ளது.
மஞ்சள்நீர் கால்வாயில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளி யேற்றப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து, தனியார் நிறு வனத்திடம் விசாரித்து நட வடிக்கை எடுக்கப்படும். அந்த கால் வாய் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ளதால், கால்வாயின் பராமரிப்புப் பணிகளை அவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
கால்வாயில் சட்டவிரோத மாக கழிவுநீர் வெளியேற்றுவதாக கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சி யரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள் ளது என்று அவர் விளக்கமளித்தார்.