விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்தவெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (50). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தார். மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த ஆலையில் 7 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளை அடுக்கியபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதையடுத்து, தீப்பொறி விழுந்து அடுத்தடுத்து இருந்த 3 அறைகள் தரைமட்டமாயின. சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், சின்னகாமன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன்கார்த்திக் (17), மீனம்பட்டியைசேர்ந்த பாண்டியராஜ் (28), சிவகாசியை சேர்ந்த வெள்ளைச்சாமி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதோடு, ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த உதயகுமார் (42), வள்ளியம்மாள் (50), லட்சுமணன் (24), அன்னலட்சுமி (55), முத்துலட்சுமி (38), முருகன்(30) ஆகியோர் பலத்த காயங்களுடன் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.