டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தவழக்குகளில் இதுவரை 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப்-4 தேர்வில் இடைத்தரகராக செயல்பட்டதாக ஜெயக்குமார், மோசடிக்கு உதவி செய்ததாக டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இருவரும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்துமோசடியில் ஈடு பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைஅடுத்து இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். குரூப்-4 தேர்வில் ஏற்கெனவே இருவரையும் காவலில் எடுத்து விசாரித்து முடித்துள்ளனர். தற்போது புதிதாக வேறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்து இருப்பதால், இந்தவழக்குகளில் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனுமதிகோரி சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீ ஸாரின் காவலில் தங்களை அனுமதிக் கக் கூடாதென்று இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குரூப்-4 முறைகேட்டில் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கண்களை கட்டி, மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும் துப்பாக்கிகளை காட்டி என்கவுன்ட்டர் செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் இருவரும் குற்றம் சாட்டினர். இதனைக் கேட்டநீதிமன்றம், சிபிசிஐடி போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து தேர்வு முறைகேடு குறித்த ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இருவரையும் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்தது. மேலும், குரூப்-4 விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தவும் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.