சென்னையை அடுத்த பையனூரில் அமைய உள்ள திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) நகரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திரைப்படத் தொழிலாளர்களுக்காக தமிழக அரசு சென்னை பையனூரில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட உள்ளதாக திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருக்கிறார். மகிழ்ச்சியடைகிறேன். இந்த நல்ல பொழுதில் பழைய நிகழ்வு ஒன்றை நினைவூட்டுவது என் கடமை.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒரு ‘கலை நகரம்’ கட்டித்தர முன்னாள் முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். அந்தத் தருணத்தில் எனது ‘ஆயிரம் பாடல்கள்’ நூல் வெளியீட்டு விழா 2011-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி சென்னையில் நடந்தது. அப்போது, தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட உள்ள கலைநகரத்தில் பாட்டாளி மக்களின் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயரில் நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினேன்.
அந்தக் காசோலையை அப்போதைய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வி.சி.குகநாதனிடம் கருணாநிதி ஒப்படைத்தார். அந்தத் தொகை திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் வங்கிக் கணக்கின் இருப்பில் இப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்.
எனவே, தமிழக அரசால் தற்போது கட்டப்படவிருக்கும் அந்த கலைநகரத்தில் நான் தந்த சிறிய தொகையைக் கொண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயரில் நூலகம் ஒன்று கட்டப்பட வேண்டும். தமிழக அரசுக்கும், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் என் பழைய கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறேன். உழைக்கும் மக்களின் கவிஞனின் பெயர் தொழிலாளர் நகரத்தில் துலங்க வேண்டும் என்பதே என் விருப்பம். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.