மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் கமீலா நாசர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியக் குடிமக்களிடம் மதம், பாலினம், சாதியின் பெயரால் பாரபட்சம் காட்டக் கூடாது என அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவு சொல்கிறது. ஆனால், புதிய குடியுரிமைச் சட்டத்தில் முஸ்லிம் மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உடனேயே உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தில் இருந்து முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தற்பொழுது தமிழக இஸ்லாமியச் சமூகத்தினர் இச்சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடுகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே துச்சமென மதித்து ஒரு சார்பு தன்மையை கொண்டு வருவதற்கு முயலும் பாஜக அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்து வரலாற்றுத் துரோகம் செய்த அதிமுக அரசு, தற்போது அறவழியில் போராடும் மக்களின் மீது வன்முறையை தூண்டிவிடும் வகையில் செயல்படுவது ஜனநாயக விரோதமானது.
தமிழக மக்களின் நியாயமான உணர்வுகளை உதாசீனப்படுத்தாமல், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய அரசு அவர்களை விரோதியாக எண்ணும் போக்கு கவலைக்குரியது. அரசுகளின் தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, அத்துன்பத்தை பொறுக்க முடியாத மக்கள் சிந்துகின்ற கண்ணீர்தான், இந்த ஆட்சியாளரின் அதிகாரச்செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.