போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு, எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. 2015-ம் ஆண்டு அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ரூ 90 லட்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரூ. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைத்தனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் நோட்டீஸ் கொடுத்த அன்றைய தினமே முன் ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.
அதன்படி அவரை இன்று விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து கடந்த 14-ம் தேதி பட்ஜெட் கூட்டத்துக்குப் போகும் முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
இந்நிலையில் இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக மத்தியக்குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். நாளைக்காலை எழும்பூர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகவிருந்த நிலையில் இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக உள்ளார். இந்த நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டதால் வழக்கு விசாரணை விரைவாக நடக்கும் என தெரிகிறது. இதே நீதிமன்றத்தில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான வழக்கில் மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் பதவி விலகினார்.
வைகோவுக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டின் கீழ் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும் இதே நீதிமன்றத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.