சிவானந்தா குருகுலத்தின் தலைவர் ராஜாராமின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.18) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "சென்னை காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் சிவானந்தா குருகுலத்தின் தலைவரும், சமூக சேவகருமான ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
சிவானந்தா குருகுலத்தை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த ராஜாராம், ஆதரவு இல்லாத பலருக்கும் அடைக்கலம் அளித்துள்ளார். ஒருவருக்கு தங்க இருப்பிடம் தருவதுதான் சிறந்த சேவை, உணவளிப்பதுதான் சிறந்த சேவை, கல்வி அளிப்பதுதான் சிறந்த சேவை என்று மக்களுக்கிடையே விவாதங்கள் நடப்பதுண்டு. ஆனால், இவை அனைத்தையுமே வழங்கிய சேவகர் ராஜாராம் ஆவார்.
சிவானந்தா குருகுலத்திற்கு பாமக பல வழிகளில் பேருதவியாக இருந்திருக்கிறது. குருகுலத்துக் குழந்தைகள் வெளியுலகைப் பார்த்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள பாமக உதவியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிவானந்தா குருகுலத்திற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் குழந்தைகள் நாளைக் கொண்டாடினார்.
ஆதரவற்றவர்களுக்குச் சேவை செய்வதையே தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்த ராஜாராமின் மறைவு அவரை நம்பியிருப்பவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்