சிவானந்த குருகுலம் நிறுவனர் ராஜாராம் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களின் சரணாலயமாக சிவானந்த குருகுலம் திகழ்கிறது. சிவானந்த குருகுலம் நிறுவனர் ராஜாராமின் து மனிதநேய சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய ராஜாராம் பலராலும் பாராட்டப்பட்டார்.
சிறிது காலமாக உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தொண்டு என்ற சொல்லுக்கு அடையாளமாகவும், அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராமின் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள்-முதியோர் எனப் பலருக்கும் ஆதரவுக் கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். என்னுடைய பிறந்த நாளில் அவரது குருகுலத்திற்குச் சென்று அங்கு தங்கியிருப்போருடன் அளவளாவி, நிதியுதவி வழங்கியிருக்கிறேன். அப்போது ராஜாராமின் தூய தொண்டுள்ளத்தையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன்.
அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார்”.
இவ்வாறு ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.