பின்னலாடை உற்பத்தி நகரமான திருப்பூரில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்து நாள்தோறும் ஏராளமான பின்ன லாடை சரக்குகள் துறைமுகங்கள், வெளிமாநில நகரங்களுக்கு தரைவழிப் போக்குவரத்து மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதில்சரக்குகளை அனுப்ப குறைந்த கட்டணம் என்பதால், ரயில்கள் மூலமாக அதிகளவிலான சரக்குகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பின்ன லாடை சரக்குகளை தவிர்த்து, வெண்ணெய், தயிர், பாத்திரம் உள்ளிட்ட சரக்குகளும் அனுப்பப்படுகின்றன.
சரக்குகள் அனுப்புவதன் மூலமாக மட்டும், நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வருவாய் கிடைத்து வருவதாகவும், ரயில் பயணிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை வருவாய் கிடைத்து வருவதாகவும், மொத்தமாக மாதத்துக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையமாக திருப்பூர்உள்ளதாகவும் தெரிவிக்கப்படு கிறது. இதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் வரும் ரயில் நிலையங்களில் ஒன் றாக திருப்பூர் உள்ளது.
இந்நிலையில், ரயில் நிலை யத்தில் முதல் நடைமேடையில் சரக்குகள் முன்பதிவு செய்யப் படும் மையத்தில் இருந்து டிராலி(தள்ளும் வண்டிகள்) மூலமாக சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டு, ரயில்களில் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகின்றன. முதல் நடைமேடையில் இருந்து 2-ம் நடைமேடைக்கு செல்ல போதிய வசதிகள் இல்லாததால், ஆபத்தை மீறி தண்டவாளங்களுக்கு இடையில் தொழிலாளர்கள் சரக்குகளை தூக்கிச் செல்கின்றனர். இடையில் உள்ள தண்டவாளங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தால், ரயில்களுக்கு கீழாக மூட்டைகளை இழுத்துச் செல்வதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தண்டவாளத்துக்கு மத்தியில் சரக்கு மூட்டைகளை எடுத்து வரும்போது, ரயில் புறப்பட்டு செல்லத் தொடங்கியது. இதைப் பார்த்து பொதுமக்கள் சத்தம் போட்டு ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயிலின் கீழ் சிக்கிய நபர், அப்படியே படுத்துக்கொண்டதால் தப்பியுள்ளார். சேதமடைந்த சரக்கு மூட்டை உடனடியாக தைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக, ரயில்பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விதிமுறைகள் யாருக்கு?
இதுகுறித்து திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ரயில் பயண ஆர்வலர் தி.ஜெயப்பிரகாஷ் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறிய தாவது:
திருப்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ஏற்றும் பணிகளில், பெரும் பாலும் தற்காலிக அடிப்படையில் வடமாநிலத் தொழிலாளர்கள் தான் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், நேரடியாக தண்டவாளங்களைக் கடந்து சரக்குகளை எடுத்துச் செல்பவர்களும் இவர்களே. ஆபத்தை உணராமல் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கேட்டால், தள்ளுவண்டியில் தண்டவாளத்தை கடக்க நடைமேடை முடிவில் அமைக்கப்பட்டுள்ள பாதை சீராக இல்லை என்கின்றனர். இருக்கும் ஒரு மின்தூக்கி, ஆட்கள் மட்டுமே செல்லும் வகையில் உள்ளது.
ரயிலில் அடிபட்டு வடமாநிலத் தொழிலாளர்கள் இறந்தாலும், நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லைஎன்பதால், அவர்களது குடும்பத் துக்கு எந்தவித பணப்பலன்களும் கிடைக்காது.
விதிமுறைகள் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும்தான். தண்டவா ளத்தை யார் கடந்தாலும் தவறு தான். எனவே, சரக்குகளை நடைமேடைக்கு மாற்ற போதிய நவீனவசதிகளை, சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். தள்ளுவண்டிகள் செல்ல சீரான பாதை அமைக்க வேண்டும். தொழிலாளர்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறி னார்.
ரயில் நிலைய வர்த்தக பிரிவு மேலாளர் முத்துக்குமாரிடம் கேட்டபோது, ‘முதல் நடைமேடையி லிருந்து 2-ம் நடைமேடைக்கு டிராலிகள் (பாரம் ஏற்றும் தள்ளுவண்டி) மூலமாக சரக்குகளை ஏற்றிச் செல்ல, புதிய வழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது.
அதில் 2-ம் நடைமேடை அருகே டிராலிகளை மேலே ஏற்றுவதில் இடப்பற்றாக்குறை உள்ளது. பாதை அமைப்பதில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அதை சரிசெய்ய மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இப்பிரச் சினைக்கு விரைந்து தீர்வு காணப் படும்' என்றார்.