நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக முதல்நாள் இரவே வந்து நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் படுத்திருந்த இளைஞர்கள். 
தமிழகம்

நள்ளிரவில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்புக்கான உடல் தகுதி தேர்வு: பகலில் வெயில் கடுமையாக இருப்பதால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக நாகைக்குவந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தும், படுத்திருந்தும் தூங்காமல் விழித்திருந்து நள்ளிரவில் தொடங்கிய போட்டிகளில் பங்கேற்றனர்.

ராணுவ வீரர் தேர்வுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 24-ம் தேதிவரை நடைபெற உள்ள இம்முகாமில் தமிழகத்தின் 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகியமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. பகலில் வெயில் கடுமையாக இறுப்பதால் உடல் தகுதி தேர்வுக்கான போட்டிகள் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றன. இதில் 1,650 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. கடும் வெயிலை கருத்தில் கொண்டு, உடல் தகுதித் தேர்வு நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 1,175 இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவே நாகைவந்து விட்டனர்.

அவர்கள் அனைவரும் நாகைமாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் தரையில் அமர்ந்தும், படுத்திருந்தும் தூங்காமல் விழித்திருந்து பொழுதைக் கழித்தனர். தொடர்ந்து, நள்ளிரவு தொடங்கி நடைபெற்ற உடல்தகுதி தேர்வுக்கான போட்டிகளில் கலந்துகொண்டனர்.

இன்று (பிப்.19) கரூர் மற்றும்திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT