தமிழகத்தில் எந்த தொழில் நிறுவனமும் மூடப்படவில்லை என்று அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பி.பெஞ்சமின் ஆகியோர் தெரி வித்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பத்மனாபபுரம் தொகுதி திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், ‘‘தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கின்றனர். அந்த தொழிற்சாலைகளை திறக்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை’’ என்றார்.
அப்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குறுக்கிட்டு பேசியதாவது:
தேசிய அளவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும், தமிழகம்தொழில் முதலீட்டுக்கு உகந்தமாநிலமாக உள்ளது. சமீபத்தில் ‘சியட்’ நிறுவன டயர் தொழிற்சாலை ரூ.4 ஆயிரம் கோடியில்முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு ரூ.1,500 கோடியில் முதல்வரால் திறக்கப்பட்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 20 ஆயிரம் பேருக்கும், நோக்கியாவுக்கு பதில் வந்துள்ள சால்காம் நிறுவனத்தில் 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் எந்த தொழிற்சாலையும் மூடப்படவில்லை. தூத்துக்குடியில் ரூ.49 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கடலூரில் ரூ.50ஆயிரம் கோடியில் பெட்ரோ கெமிக்கல் ஆலைக்கு ஒப்பந்தம்போடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டது என்பது உண்மைக்கு மாறான தகவல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமின் பேசும்போது, ‘‘சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பது தவறான செய்தி. பொருளாதாரமந்த சூழலிலும் சிறு, குறு நிறுவனங்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
36 புதிய தொழிற்பேட்டைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் தொழிற்பேட்டைகளுக்கும் உதவி செய்யப்படுகிறது. தொழில் முனைவோருக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.30 லட்சமாக இருந்த மானியத் தொகை, இந்த ஆண்டு முதலீட்டு மானிய வரம்பு ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், 3 லட்சத்து 542 வேலைவாய்ப்புகளை உரு வாக்கும் வகையில், ரூ.32 ஆயிரத்து 205 கோடி முதலீட்டில் 4,824 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்றார்.