சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2-ம் நிலை காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், இதுதொடர்பாக சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், “காவல் துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் சிறைத் துறை வார்டன்கள், தீயணைப்புத் துறையினர் என மொத்தம் 8,888பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்தத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 763 பேரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். பலர் முறைகேடாக தேர்வாகியுள்ளனர்.
கட்ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவர்களுக்கான விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை. எனவே இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தற்காலிக பட்டியலை ரத்து செய்ய வேண்டும். தனியார் பயிற்சிமையங்கள் சீருடைப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.