சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் உறங்கும்போது இளைஞர் ஒருவர் அவரது செல்போன் மற்றும் ரொக்கப் பணம் ரூ.15 ஆயிரத்தை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் பவானி. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்காவது மாடியில் உள்ள 143-வது வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப் பார்ப்பதற்காக கடந்த 15-ம் தேதி மாலை பவானியின் மருமகன் முருகன் உள்ளிட்ட உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து மருத்துவமனைக்கு வந்தனர்.
மறுநாளும் அங்கேயே நோயாளியுடன் இருக்க வேண்டி இருந்ததால் அன்று இரவு முருகன் உள்ளிட்ட உறவினர்கள் 4 பேரும் வார்டுக்கு வெளியே வந்து தரையில் படுத்து உறங்கினர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது முருகனின் பாக்கெட்டிலிருந்த பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதையடுத்து முருகன் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீஸார், மருத்துவமனையில் முருகன் படுத்து உறங்கிய வராண்டா பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
அதில் முருகன் உறங்கும் பகுதியில் அங்கும் இங்கும் உலாவும் இளைஞர் ஒருவர், அதிகாலை மூன்று மணி அளவில் நோட்டமிட்டபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முருகனை நோட்டமிட்டார். பின்னர் முருகன் பக்கத்தில் சென்று படுப்பது போல் நடித்து அவர் பாக்கெட்டில் இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடினார். பின்னர் அங்கிருந்து சத்தமில்லாமல் கிளம்பிச் சென்றார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
இது தவிர அந்த இளைஞர் அங்கும் இங்கும் உலாவும் காட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் யார்? இதற்கு முன்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதானவரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், தங்கள் உடமைகளைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.