எடப்பாடி பழனிசாமி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.18) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. ஜெயலலிதா மறைவிவுக்குப் பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். சசிகலாவின் விருப்பு, வெறுப்பின் காரணமாக பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி 16 பிப்ரவரி 2017-ல் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கடந்த மூன்றாண்டுகளில் அவர் முதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை என்று பேசப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிற ஒருவர் பதவியில் நீடிப்பது என்பது பெரிய அதிசயமல்ல. ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்பதால் அதிமுக ஒன்றுபட்ட சக்தியாக இருந்து வருகிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் வித்தியாசம் வெறும் 5 லட்சம்தான். 1.1 சதவிகித வாக்குகள் கூடுதலாக பெற்றுதான் ஜெயலலிதாவே முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகளை ஆய்வு செய்கிறபோது, பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட மாட்டோம் என்று சொன்னவர்கள், மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை 2016 முதல் ஏற்றுக்கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.
2017-ல் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்த இரண்டு மாணவர்களும், அதுபோல, 2018-ல் அரசுப் பள்ளிகளில் படித்த 2,583 மாணவர்களில் 39 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3,033 மாணவர்களில் பயிற்சி வகுப்புகளில் சேராத 48 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. இத்தகைய அநீதி காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு என்பது தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 2015-ல் ரூபாய் 100 கோடி செலவில், சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். தொடர்ந்து 2019 ஜனவரியிலும் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்தனவா? தொழில்கள் தொடங்கப்பட்டனவா? வேலைவாய்ப்புகள் பெருகினவா? ஆனால், அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட முதலீடு செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.
சமீபத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,351 குரூப்-4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கின்றன. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவுப் பணிக்காக 4,600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் முத்திரை பதித்த மூன்றாம் ஆண்டு முதலிடத்திற்கான சான்றா?
அதுமட்டுல்ல, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஒரு கோடி பேர் காத்திருக்கிறார்கள். இதில் மருத்துவர்கள் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 67 சதவிகித குடும்பங்களில் மாதச் சம்பளம் வாங்குகிற பணியில் எவரும் இல்லை. அதுபோல, தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்கள்.
தமிழக நலன்களைப் பாதிக்கிற, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம், ரயில்வே தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்குத் தடை, கரும்பு சாகுபடி குறைப்பு, குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு என பல்வேறு நிலைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2015-18 ஆம் ஆண்டு வரை வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றுக்காக தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. ஆனால், நரேந்திர மோடி அரசு வழங்கியது வெறும் ரூபாய் 1,370 கோடி. இதன் மூலம் மத்திய பாஜக அரசிடம் வாதாடி அதிக நிதி பெறத் துணிவற்ற நிலையில் அதிமுக அரசு உள்ளது.
தமிழக அரசின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் வரி வருவாய் ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்கு ரூபாய் 64 ஆயிரத்து 529 கோடி. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபாய் 96 ஆயிரத்து 271 கோடி. மானியங்கள் ரூபாய் 94 ஆயிரத்து 91 கோடி. கடனுக்கு வட்டி ரூபாய் 37 ஆயிரத்து 120 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூபாய் 21 ஆயிரத்து 617 கோடி. நிதி பற்றாக்குறை ரூபாய் 59 ஆயிரத்து 346 கோடி. இதற்கு கூடுதலாக 2011-12 இல் தமிழக அரசின் கடன் ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 541 கோடியாக இருந்தது, 2020-21 ஆம் ஆண்டில் ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடியாக பல மடங்கு கூடியிருக்கிறது.
இந்த நிலையின் காரணமாகத் தான் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, வேலைவாய்ப்பை உருவாக்குகிற வகையில் தொலைநோக்குப் பார்வையோடு அதிமுக அரசால் பெரிய முதலீடுகள் செய்ய முடியவில்லை. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடியையும் சேர்த்து தமிழக அரசு ஏறத்தாழ ரூபாய் 8 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கிறது. இதை மூடி மறைப்பதற்குத்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாத நிலையில் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக நடைபெற்ற கடும் போராட்டத்தை தணிப்பதற்காகவே காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.
எனவே, எடப்பாடி பழனிசாமி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். எனவே, தமிழக மக்கள் மிகுந்த வேதனையிலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். எப்பொழுது அடுத்த பொதுத்தேர்தல் வரும், அப்போது எப்படி அதிமுக ஆட்சியைத் தூக்கி எரிகிற வகையில் வாக்குகளை அளிக்கலாம் என மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் பாஜகவின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு விளங்கி வருகிறது. சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு அதிமுக அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!