தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்க என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதற்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த பிப்.2-ல் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது. இதில் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் வழங்கிய விதம், தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடத்தி, பிப்ரவரி 2-ம் தேதி, தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அன்பரசன், செல்வம் உள்ளிட்ட தேர்வு எழுதிய 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அவர்களது கோரிக்கை மனுவில், “காவலர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டதில் வேலூர் மாவட்டத்தில் 1019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள்.
தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இட ஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதை மாநில போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே 2017- குரூப் 1 விடைத்தாள் முறைகேடு குறித்து திருநங்கை சொப்னா வழக்கு விசாரணையில் உள்ளது. குரூப்-4, குரூப் 2- ஏ முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.