தடை விதிக்கப்பட்ட பரிசுக் குலுக்கல் திட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி, காட்டன், பரிசுக் குலுக்கல் திட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்பூரில் பரிசுக் குலுக்கல் திட்டம் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த மோசடி திட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிமுறைகள் மீறி நடத்தப்படும் இந்த திட்டத்தில் 1,000 முதல் 6,000 உறுப்பினர்கள் வரை சேர்க் கப்படுகின்றனர். மாதந்தோறும் ரூ.200 முதல் ரூ.400 வரை வசூலிக் கப்படுகிறது. தொடர்ந்து 10 மாதங் கள் வரை பணம் வசூலிக்கப் படுகிறது. குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன் பணம் செலுத்த வேண்டும். தவறினால் குலுக்கலில் உறுப்பினர்கள் இடம்பெற வாய்ப்பில்லை. இதனால் மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
மாதந்தோறும் நடத்தப்படும் குலுக்கலில் பரிசு விழுந்தவர்கள் அடுத்தமாதம் பணம் செலுத்த தேவையில்லை. குலுக்கலில் வீடு, தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள், வீட்டுக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம் பரம் செய்யப்படுகிறது. இத்திட்டத் தில் சேர்ந்த அனைவருக்கும் நிச்சயம் பரிசு உண்டு என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்பூர் டவுன் பகுதிக்கு உட்பட்ட ரோட்டரி டவுன் ஹாலில் நேற்று மதியம் பரிசுக் குலுக்கல் நடைபெறும் என ஆம்பூர் முழுவதும் நோட்டீஸ் விநியோகிக் கப்பட்டது. இதுதவிர, நகரின் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.
இதை தடுக்க வேண்டும் என போலீஸாருக்கு சமூக ஆர்வ லர்கள் தகவல் அளித்தனர். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், திட்டமிட்டபடி ஆம்பூரில் நேற்று மதியம் பரிசுக்குலுக்கல் திட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘வேலூரில் நடைபெற்ற குற்ற வியல் கூட்டத்துக்கு ஆம்பூர் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்றுவிட்டதால், உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை’’ என்றனர்.