தமிழகம்

ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா?எங்கு மாடு பிடித்தார்? பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே சுவாரஸ்ய விவாதம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனுக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நடந்த விவாதம் சுவாரஸ்யமாக இருந்தது.

கேள்வி நேரத்தில் பேசிய துரைமுருகன் திடீரென ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். ''ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன், ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எந்த ஜல்லிக்கட்டுக்குப் போனார், எப்போது மாடு பிடித்தார், எங்களுக்கு அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டும்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு மாடு பிடித்தால் நாங்கள் வந்து பார்க்க ஆவலாக இருக்கிறோம்'' என்று துரைமுருகன் பேசினார்.

இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

அப்போது ஓபிஎஸ் சபையில் இல்லை. பின்னர் சிறிது நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு கேள்விக்குப் பதிலளித்தார். அவர் பேசும்போது துரைமுருகனுக்குப் பதில் சொன்னார்.

''ஓபிஎஸ் 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற டெல்லி வரை சென்று சட்டம் நிறைவேற்றியதற்காக ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கப்படுகிறார்.

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு அய்யா துரைமுருகன் வந்தால் பார்க்க ஏற்பாடு செய்கிறோம். அவர் மாடு பிடித்தாலும் அதற்கும் ஏற்பாடு செய்து தருகிறோம்'' என்று விஜய்பாஸ்கர் பேசினார்.

இதனால் பேரவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

SCROLL FOR NEXT