டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுதொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப் பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:
மாதவரம் சுதர்சனம் (திமுக): டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அதை சீர்குலைக்கும் வகையில் நடந்துள்ள முறைகேடுகள் கவலை அளிக்கிறது.
பணியாளர் நலத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்: டிஎன்பிஎஸ்சி மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகள் உள்ளடங்கிய 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 1-9-2019-ல் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் 12-11-2019-ல்வெளியானது. தேர்வாணையம் என்பது தன்னாட்சி அமைப்பு. அதை அதிமுக அரசு உறுதி செய்கிறது.
டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகளை நடத்தி வருகிறது. ராமேசுவரம், கீழக்கரை ஆகி 2 தேர்வு மையங்களில் தவறு நடந்திருப்பது தெரிந்ததும் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள், இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 தேர்வு மையங்களில்மட்டுமே தவறு நடந்திருப்பதாகடிஎன்பிஎஸ்சி கண்டறிந்திருப்ப தால் குரூப் - 4 தேர்வுகள் முழு வதுமாக ரத்து செய்யப்படவில்லை.
தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்வாணைய முறைகேடு தொடர் பாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது. அதன் அடிப் படையில் நீதிமன்றத்தில் விசா ரணை நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து திமுகஉறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். அது அவரது உரிமை. ஆனால், திமுக ஆட்சியில் நடைபெற்றதாக அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டு்ம்.
முதல்வர் பழனிசாமி: பத்திரிகைகளில் வெளிவந்த, அனைவருக்கும் தெரிந்த உண்மைகளைத்தான் அமைச்சர் கூறினார். யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் மேலோட்டமாக பேசி வருகிறோம். ஆழமாக பேச வேண்டுமானால் தயார்.
இவ்வாறு பேரவையில் விவாதம் நடை பெற்றது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்வாணைய முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.