தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி மனு செய்ய திமுகவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக இடையீட்டு மனுதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி திருநங்கை ஸ்வப்னா ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர். பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதை அனுமதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

மேலும், ‘‘கடந்த 2015-ல் நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 63 பேர் ஒரே தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும், இந்த முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி தலைவர், செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் என உயர் பொறுப்பு வகிக்கும் பலருக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அதிகாரிகளும் அடிக்கடி மாற்றப்பட்டுள்ளனர். இதனால்தான் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என கோருகிறோம்’’ என்றும் தெரிவித்தார்.

அப்போது தனியார் டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், இந்த முறைகேட்டுக்குப் பிறகு 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து விசாரணையை வரும் பிப்.28-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT