மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 6 அதிகாரிகள் மீது புகார் கொடுத்தார். ஆனால், அவர்கள் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என சிபிஐ விடுவித்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் 'சென்டாக்' அமைப்பின் மூலம் நடத்தப்படும் மருத்துவ மாணவர் கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண்பேடி 2017-ல் பரிந்துரைத்தார். அதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த புகார் குறித்து சிபிஐ விசாரணை செய்தது.
இதனையடுத்து, சிபிஐ அமைப்பு புதுச்சேரி அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 'சென்டாக்' அமைப்பு மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் முறைகேடு குறித்து விசாரணை செய்தது எனவும், இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய சுகாகாதாரத்துறை இயக்குநர் ராமன், சென்டாக் தலைவர் நரேந்திரகுமார், செயலர் பாபு, டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''இப்படி அதிகாரிகளை சிபிஐ அமைப்பைக் காட்டி மிரட்டி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையில் கிரண்பேடி செயல்படுகின்றார் என்பது நிரூபணமாகிவிட்டது. கிரண்பேடி புதுச்சேரியை விட்டு எவ்வளவு சீக்கிரம் செல்கின்றாரோ அப்போதுதான் விடிவு காலம்'' என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
தவறவிடாதீர்!