தமிழகம்

விதியைத் தவறாகக் காட்டி சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதல்வர் பதிலை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்தது. விதியைத் தவறாகக் காரணம் காட்டி சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவையில் வண்ணாரப்பேட்டை போராட்டம், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அனுமதி மறுப்பு, முதல்வர் விளக்கம் ஆகியவற்றைக் கண்டித்து திமுக வெளிநடப்புச் செய்தது.

இதற்குப்பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கடந்த 3 நாட்களுக்கு முன் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்தும், எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது காவல்துறையினர் கண்மூடித்துனமாகத் தடியடி நடத்தி ஒரு பெரிய அக்கிரமத்தைச் செய்துள்ளனர்.

இதில் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட இடத்தில் காவல் ஆணையர், அமைச்சர் நேரில் பேசியிருக்கின்றனர். அதில் பேசியதன் பயன் என்ன? முதல்வரும் அழைத்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. அது குறித்து என்ன தகவல் அதையும் சொல்லுங்கள். அதுகுறித்து விளக்கத்தை அவையில் சொல்லுங்கள்.

சட்டப்பேரவையில் சிஏஏ குறித்து விவாதிக்கக் கோரியபோது ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விவாதிக்க அனுமதிக்க முடியாது எனத் தவறான விதியைக் காட்டி சபாநாயகர் நிராகரிக்கிறார். ஆனால், விதிப்படி விவாதித்து பின்னர் தீர்மானம் நிறைவேறாமல் போய் மீண்டும் கொண்டுவந்தால் நிராகரிக்கலாம். ஆனால் இங்கு விவாதிக்கப்படவே இல்லையே.
விதி 173-ல் தெளிவாக இருக்கிறது. தனித்தீர்மானம் கொண்டு வந்து தீர்மானத்தின் மீது விவாதிக்கப்பட்டு மீண்டும் அதே பிரச்சினையை கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதி இல்லை என்றுதான் கூறுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விவாதிக்க முடியாது எனச் சொல்லப்படுவது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது விவாதித்த முன் உதாரணங்கள் உண்டு. வண்ணாரப்பேட்டை போராட்டம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தூண்டிவிடப்பட்டது என ஆளுங்கட்சி திட்டமிட்டுப் பரப்புகிறது. இதையெல்லாம் கண்டித்துத்தான் அடையாளபூர்வ வெளிநடப்பு செய்கிறோம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT