வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டனர் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் மீண்டும் இன்று தொடங்கின. பட்ஜெட் தாக்கலுக்குப் பின் அதன் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
நேரமில்லா நேரத்தின்போது ஸ்டாலின் பேசுகையில், ''அமைதியான நிலையில் அறவழியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தத் தூண்டிவிட்டது யார்? போராட்டம் வெடித்துக் கிளம்பிய நேரத்தில் முதல்வரோ, அமைச்சர்களோ நேரில் சென்று அமைதி ஏற்படுத்தியிருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததற்கு பிராயச்சித்தமாக என்பிஆரை நடத்தமாட்டோம் என்கிற உறுதிமொழியை தமிழக அரசு அளிக்க வேண்டும்'' என்றார்.
இதற்கு பேரவைத் தலைவர் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என மறுத்தார்.
பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, '' அமைதியாக போராட்டம் நடந்த சூழ்நிலையில் காவலர்கள் வைத்திருந்த தடுப்புகளை மீறி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்து கைது செய்ய முயன்றனர். வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய போலீஸார் முயன்றபோது அவர்கள் மீது கற்கள், பாட்டில் மற்றும் செருப்புகளை வீசினர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 82 பேர் கைது செய்யப்பட்டு காவல் வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தைத் தூண்டிவிட்டனர். இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையர் இஸ்லாமிய இயக்கத்தலைவர்களுடன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்'' என்றார்.