தமிழகம்

சென்னையின் தலைமுறை, தொழில், வளர்ச்சி: தன் வரலாறு கூறும் கூவம் நதி

கே.மணிகண்டன்

இப்போது வேண்டுமானால் நான் 70 கிலோமீட்டர் தூரத்தில் வளைந்து நெளிந்தோடி, வங்காள விரிகுடாவில் கலக்கும் நதியாக இருக்கலாம். ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால், நகர வளர்ச்சியின் முக்கியப் பங்கு என்னுடையது.

என்னைச் சுற்றிலும் ஏராளமான வாழ்வாதாரங்களைக் கொண்டு, மக்களை வசிக்கத் தூண்டியிருக்கிறேன். வீடுகள் மட்டுமல்லாது, இன்றைக்கும் நகரத்தில் கவனிக்கப்படக்கூடிய பல விஷயங்களை உருவாக்கியதன் ஆரம்பமாக இருந்திருக்கிறேன். அவைகளில் சில காலத்தால் அழிய நேர்ந்திருந்தாலும், அவற்றின் பெயரும், நினைவும் மறையாமல் இருக்கின்றன.

சுதந்தரத்துக்கு முன், கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் ஒரு துறைமுகத்தைக் கட்ட ஆசைப்பட்டது. வளங்களோடு கூடிய பகுதியைத் தேடிய கம்பெனி, கடைசியில் வங்காள விரிகுடாவில் சென்று நான் கலக்கும் இடத்தைத் தேர்வு செய்தது. முன்பு தோன்றிய எந்த ஒரு நவீன நகரம் அல்லது ஊர் போல்தான் நான் பாய்ந்தோடிய பாதையிலே மெல்ல மெல்ல சென்னையின் வளர்ச்சி நடந்தேறியது.

நகரத்தின் மையப்பகுதியில் இருந்த என்னைச் சுற்றி, நகரத்தின் மொத்த வளர்ச்சியும் இருந்தது. சென்னையின் துபாஷிக்கள், எனக்குப் பின்னால் எழும்பூரில் வசிக்க ஆரம்பித்தவுடன் வளம் பெற ஆரம்பித்தார்கள். சிந்தாதிரிப்பேட்டையில் என்னுடனே வாழத் தொடங்கிய நெசவாளர்களுக்குக் கண்டிப்பாய்ப் போதுமான அளவு தண்ணீர் கிடைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனக்கு மிக அருகில் இருக்கும் சிம்ப்சனில் தான் முதல் கார் மற்றும் பேருந்து தயாரிக்கப்பட்டது என்று உங்கள் யாருக்காவது தெரியுமா? என்னுடைய பசுமையான சுற்றுப்புறங்களாக இருந்த மார்ஷல்ஸ் சாலை, காஸா மேஜர் சாலை அல்லது மாண்டியத் சாலைகளில் மேற்கிந்திய கம்பெனியின் அலுவலர்களும், தொழிலதிபர்களும் அவர்களுக்குச் சொந்தமாக ஆடம்பர வீடுகளையும், அரண்மனைகளையும் கட்டிக்கொண்டனர்.

ஆனால் இவை எல்லாவற்றையும்விட பெருஞ்சிறப்பையும், புகழையும் எனக்குத் தேடித்தந்தது புனித ஜார்ஜ் கோட்டைதான். அன்றிலிருந்து இன்று வரை அதிகாரத்தின் மையமாக அது இருக்கிறது. கன்னிமாரா ஹோட்டல், ஸ்பென்சர்ஸ் பிளாஸா மற்றும் ஹிக்கின்பாதம்ஸ் ஆகியவையும் என்னுடைய பிரிக்கமுடியாத தோழமைகள். என்னைச் சுற்றிலும் இப்போதும், அப்போதைய நகரத்தின் அடையாளங்கள் குடியானவர்கள் வீட்டில் தொடங்கி, வணிகத்தின் மையம் வரை, பரந்து விரிந்திருக்கின்றன.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை, அலைகள் மிதமாக இருந்த வரையில், மக்கள் படகில் ஏறி என்னை வலம் வந்தனர். புன்சிரிப்புகளும், கேளிக்கைகளும், விளையாட்டுகளும் நிறைந்த மாலைகளாக அவை அமைந்தன.ஆனால் அவையெல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய்விட்டன.

இப்போது என்னைச் சுற்றி மருத்துவமனைகளும், விடுதிகளும், திரை அரங்குகளும் நிறைந்துவிட்டன. ஆனால் நான் வளமான நதியாக இல்லை. அண்ணா நகர்- பூந்தமல்லி பகுதிகளில் ஏறக்குறைய வற்றிய நிலையில்தான் இருக்கிறேன். பக்கிங்ஹாம் கால்வாயைப் போலப் போக்குவரத்து வசதிகளோடு இல்லாமல் மக்களுடனான தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறேன்.

இப்போது மக்கள், மீண்டும் என்னைக் காணத் தொடங்கியிருக்கின்றனர். பாரம்பரிய விரும்பிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள் மற்றும் சிறு குழந்தைகள், மீண்டும் அழகிய, பழைய, தூய ஆதிநதியாக நான் மாற ஆசைப்படுகின்றனர். மாசுபட்ட மற்ற நதிகளைத் தூய்மைப்படுத்துவது போல, என்னையும் தூய்மையாக்கக் கோரி எண்ணற்ற ஆதரவுக் குரல்கள், இந்தியா முழுக்கவும் ஒலிக்கத்தொடங்கி இருக்கின்றன.

எனக்கான நேரம் சீக்கிரத்திலேயே வருமா?

ஆதாரங்கள்: வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சென்னை கூவம் குழு; வசந்தி விஜயகுமார், பேராசிரியர், வரலாற்றுத் துறை, சென்னை கிறிஸ்துவர் கல்லூரி, கிழக்கு தாம்பரம்; சி.எம்.டி.ஏ.; மெட்ராஸ் மூன்று நூற்றாண்டுகள் நினைவுத் தொகுதி.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

SCROLL FOR NEXT