வேளாண் மண்டலம் கொண்டுவர திமுக ஏன் முயலவில்லை என முதல்வர் பழனிசாமி கேட்டதால் அவருக்கும் துரைமுருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் மீண்டும் இன்று தொடங்கின. பட்ஜெட் தாக்கலுக்குப் பின் அதன் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் காலையில் கூட்டம் தொடங்கும் முன் அவைக்கு வந்த தமீமுன் அன்சாரி வண்ணாரப்பேட்டை சம்பவத்தைக் கண்டித்தும் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றக் கோரும் பேனரைப் பிடித்தபடி அவைக்கு வந்தார்.
பின்னர் பேரவை தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் முதல் நிகழ்வாக மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நேரமில்லா நேரத்தில் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்தக் கேள்வி நேரத்தின்போது தமிழகத்தில் வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டதற்கு திமுக சில கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''வேளாண் மண்டலத்தைக் கொண்டுவர திமுக என்ன முயற்சி செய்தது? மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறீர்கள். என்ன செய்தீர்கள்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், ''நாங்கள் பெரிய கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுடன் எதிரும் புதிருமாக இருக்கிறோம். நீங்கள்தான் நல்ல உறவில் இருக்கிறீர்களே. இதை மத்திய அரசின் அறிவிப்பாகக் கொண்டு வரவேண்டியதுதானே?'' எனக் கேள்வி எழுப்பினார்.
மாநில அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மண்டல அறிவிப்பை ஆளுங்கட்சி சாதனைபோல் பேசுவதும், மாநில அரசு அறிவிப்பதில் என்ன இருக்கிறது, மத்திய அரசு அல்லவா இதை அறிவிக்கவேண்டும் என திமுக ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவாதம் இன்று நடந்தது.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டம், சிஏஏ வை எதிர்த்துத் தீர்மானம் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் எனத் தெரிகிறது.