ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் கட்சியில் இணைவதற்கு வாய்ப்புத் தேடும் வகையில், அவருக்கு சில அமைச்சர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதாக கொமதேக ஈஸ்வரன் கூறினார்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பெருந்துறையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கொங்கு மண்டலத்துக்கான திட்டங்கள், அறிவிப்புகள் இல்லாதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதைப் பார்த்தால் தமிழக ஆட்சி முடிவுறும் நிலையில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால், அவரது கட்சியில் சேர்வதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதுபோல் உள்ளது என்றார்.