தமிழகம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்; முதல்வர் இறுதி முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

செய்திப்பிரிவு

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விவரங்கள் குறித்து முதல்வர் இறுதி முடிவை எடுப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 14-ம் தேதிசென்னை வண்ணாரப்பேட்டையில், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து, போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. காவல் துறையினர் நடத்திய தடியடியை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத் துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் சில தகவல்களால் தங்களின் உரிமை பறிபோய்விடுமோ என்றஅச்சம் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் உள்ளது. அது போன்றநிலை தமிழகத்தில் வராது. வரவும் விடமாட்டோம் என்று தமிழகஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே 23 முஸ்லிம்அமைப்புகள் முதல்வரை சந்தித்தபோதே, இதுகுறித்து முறையாக அவர்களிடம் தெரிவித்தார். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் அச்சம் உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ள 6 ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். முஸ்லிம்களின் உணர்வு அடிப்படையில் முதல்வர் இறுதி முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT