முதல்வர் பழனிசாமி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம்ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூடி, முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்தனர். பிப்.16-ம் தேதி தமிழகத்தின் 21-வது முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார்.
அவர் முதல்வராக பொறுப் பேற்று 3 ஆண்டு நிறைவடைந்து, 4-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று காலை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, முதல்வரின் செயலர்கள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் ஜெய முரளிதரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பலரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல, அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து 4-ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கும்பழனிசாமிக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களைசெயல்படுத்தி சாதனை தொடரவும்வாழ்த்துகிறேன்.
தேமுதிக தலைவர் விஜய காந்த்: முதல்வராக பழனிசாமி பதவியேற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஓர் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: முதல்வராக பொறுப்பேற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பழனிசாமிக்கு வாழ்த்துகள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி, தடம் புரளாமல் அவர் வழியில் ஆட்சி நடத்துவது மட்டுமின்றி, பலநல்ல திட்டங்களையும் அறிவித்து, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு உறுதுணையாக செயல்படும் துணை முதல்வர், அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.