தமிழகம்

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வரைவு செயல்திட்டம் தரவுகள் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு; வரைவு திட்டத்தை தமிழில் அளிக்கவும் வேண்டுகோள்

ச.கார்த்திகேயன்

தமிழக அரசு சார்பில் வெளியிடப் பட்டுள்ள பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான வரைவு செயல்திட்டம் தரவுகள் ஏதுமின்றி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அதை தமிழில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உலக அளவில் பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுபோன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதிக அளவில்கரியமிலவாயு வெளியிடப்படுகிறது.

இதன் காரணமாக புவிவெப்பநிலை உயர்ந்து, அண்டார்ட்டிகா போன்ற பகுதிகளில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன. அதனால் கடல் நீர் மட்டம் உயர்வு, கடலோரப் பகுதிகள் மூழ்குதல், எதிர்பாராத அதிகனமழை, வெள்ளம், கடும் வறட்சி, புயல், பருவம்தவறிய மழை உள்ளிட்ட பல்வேறுஇயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் சராசரியாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம்அதிகரித்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையே தொடர்ந்தால், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை புவி வெப்பம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. கரியமில வாயுவை வெளியிடும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 622 மெகா டன் (ஒரு மெகா டன் என்பது 10 லட்சம் டன்) கரியமில வாயு வெளியிடப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டில்..

இதன் காரணமாக மத்திய அரசு சார்பில், அடுத்த 10 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதைபின்பற்றி தமிழக அரசு சார்பில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல்திட்டம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதை என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதுதொடர்பான கருத்துகளை, பிப்ரவரி 23-ம் தேதிக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இந்த வரைவு செயல்திட்டத்துக்கு ரூ.3 லட்சத்து 24 ஆயிரம்கோடியை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக உள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் கூறியதாவது:

இந்த வரைவு அறிக்கையில்,தமிழகத்தில் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள், மின் உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தனித்தனியே எவ்வளவு கரியமில வாயு வெளியேறுகிறது, அதை குறைக்க அரசு என்னசெய்யப்போகிறது என்பது தொடர்பான எந்த தரவுகளும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகமாகவும், உள் மாவட்டங்களில் 40 சதவீதம் குறைவாகவும் மழை பெய்கிறது. அந்த அளவுக்கு பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

7 வேளாண் மண்டலங்கள்

இந்நிலையில் தமிழகத்தை 7 வேளாண் வானிலை மண்லங்களாக பிரித்து பணிகளை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாலுகா அளவிலோ, பிர்கா அளவிலோ திட்டமிட்டால்தான் சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கமாநில பொதுச்செயலர் எஸ்.சுப்ரமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு மனிதன் மீதும், எதிர்கால மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம் தொடர்பான வரைவு செயல்திட்டம், முற்றாக ஆங்கிலத்தில் உள்ளதை கவலையுடன் பார்க்கிறோம். இப்பிரச்சினையை ஒவ்வொரு தரப்புமக்களும் விவாதிக்க வேண்டும்.

அதனால் இந்த வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். மாவட்ட அளவில் விரிவான கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். அதிக பக்கங்களைக் கொண்ட அறிக்கையை படித்து புரிந்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT