உலக அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவதால் சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.31,392-க்கு விற்பனை செய்யப்பட்டது.
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம்விலை இந்த ஆண்டில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத வகையில் புதிய உயர்வையும் தொட்டு வருகிறது.
இதற்கிடையே, சென்னையில் 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,889-க்கும்,ஒரு பவுன் ரூ.31,112-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.35 என பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.3,924-க்கும், ஒரு பவுன் ரூ.31,392-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘உலக அளவில் தங்கம் விலை உயர்வு மற்றும் உள்ளூரில் சுமார் 15 சதவீதம் வரை தேவை அதிகரிப்பு காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தவிர, ஏப்ரல் 26-ம் தேதி வரவுள்ள அட்சய திருதியைக்காக தங்க நகை ஆர்டர் எடுக்கும் பணியும் தொடங்கிவிட்டது. இதனால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.