தமிழகம்

இந்தியாவிலேயே முதல்முறை: சுற்றுச்சூழலைக் காக்க சென்னை மெட்ரோ புதிய அறிவிப்பு

செய்திப்பிரிவு

சூழலைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக ரயிலில் சைக்கிள்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ இணை இயக்குநர் பாண்டியன், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''இனி மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களுக்குள் பயணிகள் தங்களின் சைக்கிள்களை எடுத்துச் செல்லலாம்.

எனினும் சிறிய, ஸ்மார்ட் வகை சைக்கிள்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக காலையில் சைக்கிள் பயணம் செல்பவர்கள் உபயோகிக்கும் சைக்கிள்கள், விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் சைக்கிள்கள், மடித்து எடுத்துச் செல்லக் கூடிய சைக்கிள்கள், சிறிய சைக்கிள்களுக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறோம்.

வெளிநாடுகளில் பயணிகள் சைக்கிள்களை ரயில்களில் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் முதல்முறையாக இதை அமல்படுத்தி உள்ளோம். சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன் சாதக, பாதகங்களை அறிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த இரு நாட்களாக பயணிகள் தங்களின் சைக்கிள்களைக் கொண்டு வந்து அவற்றுடன் பயணிப்பதைக் காண முடிகிறது'' என்று தெரிவித்தார்.

வழக்கமான போக்குவரத்து சேவை தாண்டி சென்னை மெட்ரோ, பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், நடனம், கோலம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. இதுதவிர கலை தெருவிழா மூலம் பறை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளையும் சென்னை மெட்ரோ ஊக்குவித்து வருகிறது.

பிப்.15 முதல் ஏப்ரல் 25 வரை சென்னையின் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளையும் மெட்ரோ நிர்வாகம் நடத்த உள்ளது.

நவீன பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT