வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் போலீஸார் அவர்களைத் தடுக்க முயற்சி செய்தபோது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் குவிந்த மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர் தினகரன் போராட்டக்காரர்களிடம் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (பிப்.15) தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய முஸ்லிம் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!