தமிழகம்

தமிழக பட்ஜெட் 2020: ரேஷன் ‘ஸ்மார்ட் கார்டு’ இருந்தால் எந்த கடையிலும் பொருள் வாங்கலாம்

செய்திப்பிரிவு

‘ஸ்மார்ட் கார்டு’ வைத்திருப்பவர்கள் மாநிலத்தின் எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவு அமைப்புகள் மூலம், வரும் ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். இதுதவிர பயிர்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் மாநிலத்தின் எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வசதி விரைவில் செயல்படுத்தப்படும். பட்ஜெட்டில் உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடியும், பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.400 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையத்தில் நாட்டு இன மாடுகளைப் பராமரிக்க தனிக்கவனம் செலுத்தப்படும். இந்தக் கல்வி நிலையமும், கால்நடை பூங்காவுக்கான இதர வசதிகளும், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட நிதி ஆதாரங்களில் இருந்தும், நபார்டு வங்கி நிதி உதவியுடனும் ரூ.1,020 கோடி செலவில் உருவாக்கப்படும். இதற்காக வரும் ஆண்டில் ரூ.199.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் உயர்வு: அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தற்போது 33.96 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. நுகர்வோர்களுக்குப் பயன் தரும் வகையில் 6 பால் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நபார்டு வங்கியின் பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின்கீழ் ரூ.304 கோடியில் 4 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT