செய்தியாளர் சந்திப்பில் நிதித்துறை செயலாளர் ச.கிருஷ்ணன். படம்:பி.ஜோதி ராமலிங்கம் 
தமிழகம்

மது விற்பனையால் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்; ரூ.12,263 கோடி மத்திய அரசிடம் இருந்து நிலுவை: தமிழக நிதித் துறை செயலாளர் ச.கிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக நிதித் துறை செயலாளர் ச.கிருஷ்ணன் கூறியதாவது:

2020-21 ஆண்டுக்கான இந்த பட்ஜெட் வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்டதாகும். அனைத்து பிரச்சினைகளையும் சமன் செய்யும் வகையில், எந்த அளவுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும், தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘எதார்த்த’ பட்ஜெட்

மூலதன செலவினங்களுக்கு, குறிப்பாக சாலை, பாசன வசதி, மின்சக்தி, குடிநீர் திட்டங்களுக்கு 26 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் என்னென்ன செலவுகள் ஏற்படும் என்பதை கணக்கிட்டு, அனைத்துக்கும் போதிய நிதிஒதுக்கப்பட்டுள்ளதால் இதை ‘ரியலிஸ்டிக்’ (எதார்த்தமான) பட்ஜெட் என்று கூறலாம். அதே நேரம், வருவாய் வரவுகளும் என்னஇருக்கும் என்பதை கணக்கிட்டு, அதற்குதகுந்தபடி மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 2019-20 நிதியாண்டில் மத்தியஅரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய வரி பங்கீடான ரூ.7,586 கோடி குறைந்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை ரூ.10 ஆயிரம் கோடி அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

அவசிய தேவைக்கு தனி கவனம்

மத்திய அரசின் 15-வது நிதிக் குழு பரிந்துரையில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. வருவாய் பற்றாக்குறையில் ரூ.4,025 கோடி மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில வருவாய் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை கவனமாக கணித்துள்ளோம். வளர்ச்சி, வருவாயை கணக்கிட்டு சமன்படுத்தும் பட்ஜெட்டாகவே இதை தயாரித்துள்ளோம்.

அவசியத் தேவைகளுக்கு பட்ஜெட்டில் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீடு இல்லாத 8,803 பழங்குடியினரின் குடும்பங்களுக்கு வீட்டுவசதி உட்பட பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் ரூ.660 கோடியில் செய்யப்படும்.

2.10 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு ஓய்வூதியம்மட்டுமின்றி அவர்களது தேவைகளுக்கும், சிறுபான்மையினருக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கான சிறப்பு தன்னிறைவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

மாநிலத்தின் கடன் ரூ.4.5 லட்சம் கோடியை தாண்டி அதிகரித்து வருகிறதே?

கடனை பொறுத்தவரை, மாநில நிதி பற்றாக்குறை வரம்பு, மாநில வருவாயில் 3 சதவீதமாக உள்ளது. மாநில வருவாய் தொடர்ந்து ஆண்டுதோறும் அதிகரிக்கும். அதன் அடிப்படையில் நிதி பற்றாக்குறையும் அதிகரிக்கும். அதை பொறுத்து, நம் மாநிலத்துக்கு கூடுதலாக கடன் வாங்க வாய்ப்பு உள்ளது. மாநில மொத்த வருவாயில் 25 சதவீதத்துக்குள் கடன் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், கடன் ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்தாலும், அதன் வரம்பு தற்போது 21.83 சதவீதமாகவே உள்ளது. மேலும்கடனாக பெறப்படும் தொகை, மூலதன செலவினங்களுக்கும், வளர்ச்சியை பெருக்கும்செலவினங்களுக்கும் பயன்படுத்தப்படுவதால், முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க என்ன காரணம்?

மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறை இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தமிழகத்தில் அதிக அளவில்மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் அவ்வாறு இல்லாததால் வருவாய் பற்றாக்குறை இல்லை. இதுபற்றி 15-வது நிதிக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் செலவுகளில் தவறு இல்லை என்று கூறி மானியமும் அளித்துள்ளனர். தவிர, முக்கிய செலவினங்கள், பேரிடர் தொடர்பான செலவினங்கள் ஆகியவற்றால் செலவினத்தில் ஆண்டுதோறும் மாறுதல்கள் இருக்கும். பொருளாதார நிலைமையை பொறுத்து வருவாய் குறையும். இதனாலேயே, பற்றாக்குறையில் வித்தியாசம் ஏற்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் இருந்ததால் மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி?

உள்ளாட்சி தேர்தலுக்கும், மத்திய அரசு நிதி அளிக்காததற்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசு அடிப்படை மானியத்தை கடந்த 2017-ம் ஆண்டு முதலே யாருக்கும் வழங்கவில்லை. மத்திய அரசு நிதிநிலையை சமாளிக்க ஏதேனும் காரணம் கூறி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் இழப்பு ஏற்பட்டது என்று சம்பந்தப்படுத்தக் கூடாது.

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய மொத்த நிலுவை எவ்வளவு?

தற்போதைய நிலவரப்படி உள்ளாட்சி துறைக்கு ரூ.7 ஆயிரம் கோடி, பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடி உட்பட ரூ.12,263 கோடி நிலுவைத் தொகை வரவேண்டி உள்ளது.

தமிழகத்தில் மதுபான விலை உயர்த்தப்பட்டதால் வருவாய் உயர்ந்துள்ளதா? மொத்தமாக டாஸ்மாக் வருமானம் எவ்வளவு?

மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் அதிகரிக்கும். மாநில கலால் வரி, விற்பனை வரி மூலமாக ரூ.30 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT