கணேஷ்குமார் 
தமிழகம்

108 ஆம்புலன்ஸ் வராத நிலையில் மூச்சு திணறலால் இறந்த கல்லூரி மாணவர்: சமூக வலைதளங்களில் வைரலான மாணவரின் ஆடியோ

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் ‘108' எண்ணை அழைத்து ஆம்புலன்ஸை அனுப்பும்படி கெஞ்சும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிஉள்ளது.

காஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜனின் மகன் கணேஷ்குமார்(18). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மூங்கில் மண்டபம் அருகே உள்ள பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் விளையாடச் சென்ற அவருக்கு, நண்பர்கள் யாரும் அருகில் இல்லாதபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அங்கேயே மயங்கிக் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கணேஷ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கான இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில், அவரது செல்போனை எடுத்து யாரிடமெல்லாம் கடைசியாக பேசியுள்ளார் என்று குடும்பத்தினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அவர் உயிர்போகும் நேரத்தில் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ‘எனக்கு மூச்சு அதிகம் வாங்குகிறது. முடியவில்லை பச்சையப்பன் பள்ளிக்கு வாங்க’ என்று கெஞ்சும் ஆடியோ இருந்துள்ளது.

அந்த மாணவர் ‘பச்சையப்பன் பள்ளிக்கு வாங்க’ என்று 108 எண்ணை அழைத்துக் கேட்கும்போது, எதிர்முனையில் பேசிய ஊழியர் ‘பக்கத்தில் யாராவது இருந்தால் போனை கொடுங்கள்’ என்கிறார்.

’யாரும் இல்லை சீக்கிரம் வாங்க’ என்று இந்த மாணவர் கேட்க ‘பச்சையப்பன் பள்ளி எங்குள்ளது’ என்று கேட்கிறார். அப்போது ‘மூங்கில் மண்டபம்’ என்று மாணவர் கூற, ‘எந்த மாவட்டம்’ என்று ஊழியர் கேட்க ‘காஞ்சிபுரம்’ என்கிறார். ‘நீங்கள் சரியாக வழி சொல்லாமல் எப்படி வண்டியை அனுப்புவது’ என்று ஊழியர் பேசுவதுடன் அந்த உரையாடல் முடிகிறது.

அந்த இளைஞர் “பச்சையப்பன் பள்ளி, மூங்கில் மண்டபம், காஞ்சிபுரம்” என்று கூறுகிறார். இதை காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு தெரிவித்தாலே அந்த இடத்துக்கு எளிதில் வர முடியும். ஆனால், எதிர்முனையில் பேசியவர் இறக்கும் நிலையில் பேசியவரின் சூழல் புரியாமல், அருகில் உள்ளவரிடம் கொடுத்து தெளிவாக வழி சொல்லுங்கள் என்பதுபோல் அந்த இணைப்பை துண்டித்துவிட, அங்கேயே கணேஷ்குமார் இறந்துள்ளார். இந்தஆடியோ வைரலாகி உள்ளது.

இதுபோல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் செயலியை(ஆப்) செல்போனில் வைத்திருப்பது நல்லது. சரியாகப் பேச முடியாத சூழ்நிலையில் கூட அந்த ஆப் மூலம் போன் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடம் சரியாக ஜிபிஎஸ் மூலம் தெரிந்துவிடும். இது தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

ஆம்புலன்ஸ் மாவட்ட பொறுப்பாளர் விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் 108 ஆம்புலன்ஸுக்கான பொறுப்பாளர் உதயநிதியிடம் கேட்டபோது, “சில நேரங்களில் தவறான அழைப்புகள் வரும். சிலர் குடிபோதையில் கூட பேசுவர். பேசுபவர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடம் போனை கொடுக்கும்படி கூறுவர். ஆனால், இந்த மாணவர் விஷயத்தில் இதுபோல் செய்திருக்கக் கூடாது. தவறான காலாக இருந்தாலும் ஆம்புலன்ஸை அனுப்பியிருக்க வேண்டும். இவர்களே முடிவு செய்யாமல் இது தொடர்பாக அடுத்த நிலையில் உள்ளவர்களிடமாவது பேசி இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வு இனி நடக்கக் கூடாது என்பதற்கான பயிற்சி இப்போது நடந்து வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT