தமிழகம்

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீரமானம்; மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை - டெல்லியில் நாராயணசாமி, கிரண்பேடி முகாம்

செ.ஞானபிரகாஷ்

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் நிறைவேறியுள்ள நிலையில் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் முதல்வர் நாராயணசாமியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முகாமிட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்ற புதுச்சேரி அரசு முடிவு எடுத்திருந்தது. அதையடுத்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் சபாநாயகர் சிவக்கொழுந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரிடம் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கடிதம் தந்தனர்.

அதையடுத்து முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதில் மத்திய உள்துறையின் கீழ் புதுச்சேரி உள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் தந்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் எதிர்ப்பையும் மீறி சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி அரசு தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து தலைமைச்செயலர் அஸ்வனி குமாருடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து ஆலோசித்தார். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கிரண்பேடி செய்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், "புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எதிராக அறிக்கையை மத்திய அரசுக்கு கிரண்பேடி அனுப்பியுள்ளார். குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இவற்றின் நகலை அனுப்பியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக ஆட்சியே கலைத்தாலும் கவலையில்லை என்று முதல்வர் நாராயணசாமியும் தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் முதல்வர் நாராயணசாமியும், துணநிலை ஆளுநர் கிரண்பேடியும் டெல்லி சென்றுள்ளனர்.

முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். ஆளுநர் கிரண்பேடியும் முக்கியமானவர்களை சந்திப்பார் என தெரிகிறது.

SCROLL FOR NEXT