தமிழகம்

மதுரையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண் வாக்காளர்களே அதிகம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

முன்னதாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

பின்னர், 23.12.2019 முதல் 22.1.2020 வரை பெயர்களைச் சேர்க்கவும் , நீக்கவும் , திருத்தங்கள் செய்யவும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திடவும் உரிய படிவங்கள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஜனவர் 4,5 தேதிகள் மற்றும் 11,12 ஆகிய 4 நாட்களிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

அங்கு பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு தகுதி வாய்ந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டன.

அதனடிப்படையில் இன்று (14. 02.2020) மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆண் வாக்காளர்கள் 13,02,700 ; பெண் வாக்காளர்கள் 13,40, 435 : இதரர் 170 ஆக மொத்தம் 26,43,305 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

இத்தகவலை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான டி.ஜி.வினய் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT