3 ஆண்டுகளாக நீடித்து வந்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என நம்புவதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனியாக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்தன.
இந்நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேர் மீதும் அதிமுக தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை, கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாதென சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதை எதிர்த்து திமுக கொறடா சக்ரபாணி மற்றும் டிடிவி அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுக்கப்படாமல் இருந்த வழக்கில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம்.பாப்டே அமர்வு கடந்த 4-ம் தேதி வழக்கு விசாரணையை எடுத்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணையை 14 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தது. அத்துடன், தகுதி நீக்க மனு மீது சபாநாயகர் ஏன் குறித்த கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டு தமிழக சட்டப்பேரவைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டப்பேரவைச் செயலர் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று சபாநாயகர் தரப்பு விளக்கத்தை ஏற்பதாகவும், அவரது நடவடிக்கையில் தலையிட முடியாது எனவும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது. சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என நம்புவதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது.
பின்னணி:
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனியாக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்தன.
இந்நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேர் மீதும் அதிமுக தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதே கோரிக்கையுடன் தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வில் நடைபெற்ற விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், சட்டப்பேரவைத் தலைவர் இதைத்தான் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதை எதிர்த்து திமுக கொறடா சக்ரபாணி மற்றும் டிடிவி ஆதரவு அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சபாநாயகர் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.