தமிழகம்

ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம், வெப்சீரியலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தீபா மேல்முறையீடு: இயக்குநர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவு

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் தலைவி, ஜெயா, குயின் என்றதிரைப்படம் மற்றும் வெப்சீரியலுக்கு தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் 2 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக பதவி வகித்த எனது அத்தை ஜெயலலிதாவுக்கென பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு, நற்பெயர் உள்ளது. இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி தமிழில் ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படம் எடுத்து வருகின்றனர். இதில் கங்கணா ராவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதேபோல, நடிகை ரம்யாகிருஷ்ணனை வைத்து ‘குயின்’என்ற வெப் சீரியலை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்எடுத்துள்ளார். இந்த திரைப்படங்களையும், சீரியலையும் எடுப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசான என்னிடம் அனுமதி பெறவில்லை. இதனால் இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால் ‘குயின்’ வெப்சீரியலில் எனது அத்தையின் நற்பெயரைக் கெடுக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இப்படங்களுக்கும், சீரியலுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துவிசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT