சென்னையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளின் முகத்தைமாற்றும் முயற்சியாக அக்குடியிருப்புகளில் உள்ள பெருஞ்சுவர்களில் வண்ணஓவியங்களை வரையும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா தொண்டு நிறுவனம் மற்றும் ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெரிய சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந்து வருகிறது.
சென்னையிலும் அதுபோன்ற ஓவியங்களை வரைய மாநகராட்சி நிர்வாகத்தை அணுகியது. அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் என்றால் அசுத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து மாற்றும் விதமாக, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பெருஞ்சுவர்களில் வண்ண ஓவியங்களை வரையும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது 3 கட்டிட சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது அங்கு வசிக்கும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ஓவியங்களை வரையும் பணியில், கனடா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் பல இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடங்களிலும், ஓவியங்களை வரைய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.