தமிழகம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் அளித்த கடிதத்தை வெளியிட ஏன் தயக்கம்?- அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

செய்திப்பிரிவு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

“பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்துக்கும் உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்” என்று அறிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 9-ம் தேதி முதல்வர் பழனிசாமி வெளியிட்ட, ‘காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்புவேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்ற அறிவிப்பில் சந்தேகங்கள் உள்ளன என்பதை அமைச்சர்ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது திமுக தலைவரின்கேள்விகளில் உள்ள நியாயத்தையும், விவசாயிகளுக்காக அவர் எழுப்பிய உரிமைக் குரலையும் உணர்த்தியுள்ளது.

ஆனால், திமுகவையும், ஸ்டாலினையும் வம்புக்கு இழுக்கும் நோக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீண்பழி சுமத்தியுள்ளார். மீத்தேன் திட்டம் பற்றிய குற்றச்சாட்டு்க்கு ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்து வந்தார் என்பதை அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

பொதுப் பிரச்சினை தொடர்பானது என்றால் அந்தக் கடிதத்தை வெளியிடத் தயங்குவது ஏன்? தமிழக அரசே சட்டம் இயற்ற முடியும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது ஏன்? ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டல திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டுகிறார்.

நீட் தேர்வு, ஜிஎஸ்டி, உதய், உணவு பாதுகாப்பு சட்டம் என்று மாநில அரசின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் தாரைவார்த்துள்ள அதிமுக அரசின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக தலைவரை குறைகூற உரிமை இல்லை.

விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட்டால் அதை ஆதரிக்கும் முதல் நபராக ஸ்டாலின்தான் இருப்பார். அதேநேரத்தில் விவசாயிகளை ஏமாற்ற நினைத்தால் அதை முதலில் துணிச்சலுடன் எதிர்ப்பவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை ஜெயக்குமார் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT