தமிழகம்

ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதால் 28% ஆக குறைந்த இருசக்கர வாகன விபத்து உயிரிழப்பு: சாலை விதிகளை மீறிய 1.19 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து

கி.ஜெயப்பிரகாஷ்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்குஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதால் 2019-ல் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பது 28 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், சாலை விதியைமீறிய 1.19 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து வரும்சாலை விபத்துகள், இறப்புகளைக் குறைக்க தமிழக அரசு போக்குவரத்துத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்கான பலன் கிடைக்கத் தொடங்கி விட்டது.

இதற்கிடையே, கடந்த 2019-ம்ஆண்டில் நடந்த சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறித்துதமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 57,728 சாலை விபத்துகளில் மொத்தம் 10,525 பேர் இறந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 10.47 சதவீதம் இறப்பு குறைந்துள்ளது.

மொத்த சாலை விபத்துகளில், 56,374 விபத்துகள் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே, சாலை விதிகளை மீறுவோர் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணியப்பட்டுள்ளதா, கார் ஓட்டிச் செல்லும்போது சீட்பெல்ட் அணியப்பட்டுள்ளதா என்பன, போக்குவரத்து போலீஸார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதுகுறித்து தீவிர நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சாலை விதிமீறல்கள் காரணமாக 2019-ல் மொத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 978 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட்(தற்காலிக இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, செல்போன்பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டியதால் 35,834, மதுகுடித்து விட்டு ஓட்டியதால் 20,212, அதிவேகமாக ஓட்டியதால் 10,151 பேரின் ஓட்டுநர்களின் உரிமங்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைக்க சாலை பாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

சாலை விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவமனைகளிடையே தொடர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளோம். போக்குவரத்துத் துறை மட்டுமல்லாமல், சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட துறைகளோடு இணைந்து பணியாற்றி வருவதன் பலனாக சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.

இதேபோல், சாலை விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2018-ல் மொத்தம் 3,35,152ஓட்டுநர் உரிமங்களும், 2019-ல் 1,19,978 ஓட்டுநர் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 3,965-ல் இருந்து 3,537 ஆகக் குறைந்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் இறப்பு எண் ணிக்கை 2,914-ல் இருந்து 2,077 ஆகக் குறைந்துள்ளது. ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதால் 28% இறப்பு குறைந்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள், இறப்புகளை பெரிய அளவில் குறைக்க திட்டமிட்டுள்ளோம். மற்றொருபுறம் சாலை விபத்துகளைக் குறைக்க கல்வி நிறுவனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT